அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்ற முதல் நாளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், துறை சார்ந்த அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாணியாற்ற வேண்டும். மனுக்களை நிலுவையில் வைக்காமல் அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.
ஊத்துக்குளி தாசில்தாரை அழைத்தபோது அவர் கூட்ட அரங்கில் இல்லை. கூட்டத்துக்கு விரைந்து வருமாறு அவர் கடிந்து கொண்டார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளரை அழைத்து அந்த மனுவை கொடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக கூட்ட அரங்குக்கு முன்பு காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண் இருந்த இடத்துக்கு சென்று, மனுவை வாங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று நடந்த கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.