மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது குறித்த முகாம்
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது குறித்த முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. உதவி கலெக்டர் க.மகாலட்சுமி தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். மேலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மனுக்களை வழங்குவதற்கு ஏதுவாக, உதவி கலெக்டர் தனது அலுவலக அறையின் வெளியே வந்து மனுக்களை பெற்றார்.
இதில், கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 5 வட்டங்களில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனுக்களை வழங்கினர்.
இலவச வீட்டுமனை, காது கேளாதோர் எந்திரம், சக்கர நாற்காலி, மாதாந்திர ஓய்வூதியம், இலவச பஸ் பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை மாற்றுத்திறனாளிகள் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், இலவச வீட்டுமனை குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்ற மனுக்கள் சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவுக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நாளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் வழங்கினார்கள்.