மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
பனங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
திட்டச்சேரி:
பனங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க முகாம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கம் முகாம் நடந்தது. முகாமினை கலெக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. விடுபட்டவர்களுக்கு வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
2 லட்சத்து 50 ஆயிரம் மாத்திரைகள்
நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார், சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், வட்டார டாக்டர் இளங்கோ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.