சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க பிரசாரம்
சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேலு, ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட பொருளாளர் ரங்கநாதன், சாலைப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் முத்து, வட்ட பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் காஞ்சனாமேரி அனைவரையும் வரவேற்றார். பிரசார இயக்கத்தின் மாநில செயலாளர் அம்சராஜ், மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாநில மைய செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் முதல்-அமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டி அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் பணி ஓய்வுக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும், கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்டர் விடுப்பு சலுகையை உடனடியாக வழங்குவதோடு, காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் வீரபத்திரன், சாமிதுரை, விஜயா, சாந்தி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.