கிண்டி என்ஜினீயரிங் உள்பட அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வளாக நேர்காணல் தொடங்கியது


கிண்டி என்ஜினீயரிங் உள்பட அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வளாக நேர்காணல் தொடங்கியது
x

கிண்டி என்ஜினீயரிங் உள்பட அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வளாக நேர்காணல் தொடங்கி இருக்கிறது. இதுவரை 70 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை,

என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டெர்வியூ) தொடங்கி, அவர்கள் தங்களுடைய படிப்பை நிறைவு செய்யும் போது பணிக்கான உத்தரவாதத்தை பெறுகிறார்கள்.

இதில் பலருக்கு உயர்தரமான நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்திலும், சிலருக்கு நடுத்தரமான நிறுவனங்களில் ஓரளவுக்கு திருப்திப்படக்கூடிய வகையிலான ஊதியத்திலும் பணிகள் கிடைக்கும்.

இந்த நிலையில் நடப்பாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் வளாக நேர்காணல் இதுவரை தொடங்கப்படாமல் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் கூட வளாக நேர்காணல் தொடங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

தாமதம் ஏன்?

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர முக்கிய நிறுவனங்கள் அவர்களுக்கான பணியாட்களை தேர்வு செய்வதில் சற்று தாமதம் காட்டுவதாகவும், அதனாலேயே வளாக நேர்காணல் தொடங்குவதிலும் தாமதம் ஆவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இருப்பினும், மொத்தமாக பணியாட்களை தேர்வு செய்யும் (பல்க் புக்கிங்) தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய நிறுவனங்களை தவிர, மற்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் வளாக நேர்காணலில் பங்கேற்று, அவர்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய தொடங்கி இருக்கின்றன.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளில் வளாக நேர்காணல் தொடங்கியுள்ளது.

70 நிறுவனங்கள்...

இதுவரை 70 நிறுவனங்கள், வளாக நேர்காணலில் பங்கேற்க பதிவு செய்திருப்பதாகவும், அதில் 43 நிறுவனங்களின் நேர்காணலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, அவர்களில் 289 இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் பணி இடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆப்பியன் என்ற நிறுவனம் ஆண்டுக்கு ரூ.29 லட்சம் சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

முன்னணி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களும் 3 ஆண்டுகளுக்கு பிறகு வளாக நேர்காணலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வளாக நேர்காணலில் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிக வேலைவாய்ப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, சில என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் வளாக நேர்காணல் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. வளாக நேர் காணல் தாமதமாக தொடங்கினாலும், கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகளவில் இருப்பதாக கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story