கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்படுமா?


கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்படுமா?
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அதனால் தண்ணீர் வீணாகி வாய்க்காலில் செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அதனால் தண்ணீர் வீணாகி வாய்க்காலில் செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் உள்ள மெயின் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரம் பகுதியில் உள்ள புதுச்சேரி வாய்க்கால் அருகே ராட்சத பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிறது.

உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்கிறது

அதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுவரை சரி செய்யாததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்கிறது. மேலும் இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story