நாட்டுக் கோழி பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டுக் கோழி பண்ணை
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24- ம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான (250 கோழிகள்) 100 நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர் 250 நாட்டுக் கோழிகள் வளர்த்திட 625 சதுர அடி கோழிகள் தங்கும் கூரை வசதி உடையவராக இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார நாட்டுக் கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவுக்கான விலையில் 50 சதவீதம் கோழி தீவனத்துக்கான விலையில் 50 சதவீதம் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் 30 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கலாம்
மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் பயனாளி முந்தைய 2022-23-ம் ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.