பூங்காவில் உடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா?
திற்பரப்பு படகுதுறை பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அருமனை,
திற்பரப்பு படகுதுறை பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துவிட்டு திற்பரப்பு தடுப்புஅணையில் படகுதுறையில் படகு சவாரி செய்கிறார்கள்.
படகுதுறை அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்வது வழக்கம். தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளன. பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டுகள், ஊஞ்சல் போன்றவை சேதமடைந்து காணப்படுகின்றன.
குழந்தைகள் ஏமாற்றம்
இதனால் இங்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகிறார்கள். பெரியவர்கள் படகுத்துறையில் படகு சவாரி செய்யும் நேரத்தில் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விரும்புகிறார்கள்.
ஆனால் சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடினால் கீழே விழுந்து காயம் ஏற்படும் என்ற அச்சத்தில் பெரியவர்கள் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. இதனால் குழந்தைகள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே படகு துறையில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரித்து விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.