வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.
புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.
கவலை இல்லை
இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.
அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.
வாகனங்கள் ஏலம்
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.
பொதுமக்கள் அச்சம்
சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருபாலன்:-
சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி அருகே உள்ள சாலையில் இரு பக்கமும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்பதால் வெயில், மழையில் நனைந்து கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்ததுடன் செடி, கொடிகளால் சூழப்பட்டு காணப்படுகின்றன. மேலும் அதற்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் குடியிருந்து வருகின்றன.
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இது திகழ்ந்து வருகிறது. இதனால் அந்த வழியாக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். இதேபோல் போலீஸ் நிலையங்கள் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பழுதடைந்து கிடக்கினறன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை யாரும் உரிமை கோரவில்லை என்றால் உடனடியாக ஏலத்துக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமையாளர்களுக்கு இழப்பு
ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்த வக்கீல் ராமசாமி:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள வாகனங்கள் திருட்டு, விபத்து மற்றும் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களால் போலீஸ் நிலையத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வாகனங்கள் மக்கி பழுதடைந்து வருகிறது. இதனால் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் போலீஸ் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையாளர்களை அழைத்து வாகனங்களை எடுப்பதற்கான வழிமுறைகளை கூறி கோர்ட்டு மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரிமை கோராத வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் எண்ணிக்கை குறைய தொடங்கும்.
சுற்றுப்புறச்சூழல் மாசு
எடப்பாடி பகுதியை சேர்ந்த மெக்கானிக் பூபதி:-
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட வழக்குகள் முடிவுற்ற நிலையில் அதிகமான வாகனங்கள் போலீஸ் நிலைங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதுடன், தேவையில்லாமல் இடத்தையும் இந்த வாகனங்கள் அடைத்து கொள்கின்றன.
மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் விடுவதாக இருந்தால் குறைந்த விலைக்கு தான் கேட்பார்கள். இதனால் யாருக்கும் லாபம் இல்லை. உரிய நேரத்தில் வாகனங்களுக்குரிய சான்றிதழ்களுடன் எங்களை போன்ற மெக்கானிக் மற்றும் பொதுமக்களுக்கு கிடக்கும் வகையில் ஏலம் விட்டால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
ரூ.1.38 கோடி வருவாய்
சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா:-
சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை கோராதவற்றை ஏலம் விடப்பட்டு வருகிறது. வாகனங்களின் உரிமையாளருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். ஏலம் விடுவதற்காக கமிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏலம் விடுதற்காக முன்பாக வாகனங்களின் விலை நிர்ணயிப்பது தொடர்பாக இந்த கமிட்டி மூலம் ஆலோசனை நடத்தப்படும். ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை உயர் அதிகாரிகளின் உத்தவிரவின் பேரில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.
இதற்கான உரிய அறிவிப்பு முன்னதாக வெளிப்படும். கடந்த ஆண்டு மாவட்டத்தில் 856 வானங்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 84 ஆயிரத்து 576 வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் முன்பு கோர்ட்டில் நடைபெறும் வழக்கு தொடர்பான வாகனங்கள் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையும் அதிகளவு நிறுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவுறுத்தலின் பேரில் வருகிற மார்ச் மாதம் கூடுதல் வாகனங்கள் ஏலம் விட நடவடிகை்க எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ஏலம் விவரங்கள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.