பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.25 விலை கிடைக்குமா?
பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் தேயிலை தோட்டங்கள் பராமரிக்காமல் விடப்பட்டு உள்ளன. பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.25 விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் தேயிலை தோட்டங்கள் பராமரிக்காமல் விடப்பட்டு உள்ளன. பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.25 விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தேயிலை விவசாயம்
மலைமுகடுகளை வருடும் மேகக் கூட்டங்கள். மேனியை வருடும் குளிர்ந்த காற்று. பசுமை போர்த்திய புல்வெளிகள். பார்க்கும் இடமெல்லாம் பச்சை தேயிலை தோட்டங்கள் என மலைகளின் அரசியை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். தொடர்ந்து ஆர்வத்தில் தோட்டங்களுக்குள் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
ஆனால், என்னவோ தேயிலை தோட்டங்களை பராமரித்து வரும் விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் பசுமையாக மாறுவது இல்லை. தொடர் மழை, கடும் குளிர், கோடை வெயில் என எந்த காலநிலையாக இருந்தாலும் பச்சை தேயிலையை அறுவடை செய்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேயிலைத்தூள் விற்பனையில் அன்னிய செலாவணியை ஈட்டி வந்த விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
கிலோவுக்கு ரூ.11 விலை
தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.11 மட்டுமே விலை கிடைப்பதால், தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர். நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எந்த பலனும் ஏற்படுவதில்லை. இதனால் தேயிலை விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, தேயிலைக்கு உரிய விலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
காப்பாற்ற வேண்டும்
கூடலூர் ஓவேலி சு.ஆனந்தராஜா :-
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக பச்சை தேயிலை விலை வரலாறு காணாத அளவுக்கு அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் கூடலூரில் கிலோ ஒன்றுக்கு ரூ.11 வழங்கப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவினங்களை ஈடுகட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். தேயிலை இடுபொருட்களான பூச்சிகொல்லி மருந்துகள், உரங்கள் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, ஒரு மடங்கை விட கூடுதலாக அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை பொட்டாஸ் விலை கடந்த ஆண்டு ரூ.750. நடப்பாண்டில் அதன் விலை ரூ.1,700 ஆகும். இதை சிறு விவசாயிகள் எப்படி ஈடு கட்ட முடியும்.
கடும் மழையால் தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதித்து விட்டது. கூடலூர் பகுதியில் உள்ள ஜென்ம நில பிரச்சனையை காரணம் காட்டி தேயிலை வாரியம் அனைத்து சலுகைகளையும் கடந்த 9 ஆண்டுகளாக நிறுத்தி விட்டது. குறிப்பாக ஓவேலி பகுதி விவசாயிகளுக்கு தேயிலை வாரியத்தின் எந்த நல உதவிகளும் வழங்கப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் தேயிலை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
தொடர் நஷ்டம்
கூடலூர் அனந்தசயனம்:-
பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சராசரியாக கிலோ ரூ.20 வரை விலை கிடைத்தால் தேயிலை விவசாயம் சுமூகமாக மேற்கொள்ளலாம். தற்போதைய விலை நிலவரப்படி உரம், மருந்து வாங்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான தோட்டங்கள் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. தேயிலை செடிகளை தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே தரமான இலை கிடைக்கும்.
கடந்த 2 மாதங்களாக தொடர் கனமழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் தொடர் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் தேயிலை விவசாயம் நலிவடைந்து வருவதால், தோட்ட தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர். மேலும் வருவாய் இல்லாததால் தேயிலை செடிகளுக்கு இடையே காபி நாற்றுகள் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் தேயிலை விவசாயம் குறைந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே, நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊக்கத்தொகை வழங்கவில்லை
கூடலூர் கம்மாத்தி சிவதேவன்:-
பச்சை தேயிலைக்கு எந்த மருந்தும் தெளிக்காததால் மிகக் குறைவாகவே விளைச்சல் உள்ளது. மேலும் இயற்கையாக விளைவதால் கிலோ ரூ.20 விலை நிர்ணயம் செய்து வழங்கலாம். ஆனால், உரிய விலை கிடைக்காததால் கிடைக்கும் வருவாயை பச்சை தேயிலை பறிக்கும் கூலி தொழிலாளர்களின் சம்பளத்துக்கு வழங்கவே சரியாக உள்ளது. விவசாயிகளின் அன்றாட உணவுக்கு ரேஷன் அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுவதால், அதன் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.
தேயிலை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மதிப்பு கூட்டப்பட்ட கிரீன் டீ உள்பட பல்வேறு வகையான தேயிலைத்தூள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 2013-ம் ஆண்டு தேயிலை செடிகளை கவாத்து செய்ததற்கான ஊக்கத்தொகையை தேயிலை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று கேட்டாலும் நிதி இல்லை என விளக்கம் அளித்து வருகின்றனர்.
விவசாயிகள் கமிட்டி
கூடலூர் மணிவர்மா :-
விலை குறைவாக கிடைப்பதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை உரம், தொழிலாளர்கள் சம்பளம் என செலவு போக மிஞ்சுவது இல்லை. எனவே, குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.25 நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் திருப்பூர் அல்லது கோவைக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்படும்.
கடையில் டீ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பசுந்தேயிலை கிலோ ரூ.11 என நிர்ணயிக்கப்படுகிறது. நீலகிரி தேயிலைத்தூளை விற்பனை செய்ய வேலையில்லாத இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் தேயிலை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகள் கொண்ட கமிட்டியை உருவாக்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.