கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்கலாமா?
கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியில் 45 நாட்கள் நடந்த மறுசீரமைப்பு பணி முடிவடைந்துள்ளது. எனவே இந்த பள்ளிக்கூடத்தை திறக்கலாமா?, அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதை அடுத்து மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய தொடர் போராட்டம் ஜூலை மாதம் 17-ந்தேதி கலவரமாக வெடித்தது.
போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். மேலும் பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து 275 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் கலவர கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கூடம் மூடல்
கலவரத்தால் மூடப்பட்ட பள்ளிக்கூடம் இதுவரை திறக்கப்படவில்லை. இருப்பினும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த பெற்றோர்கள் பள்ளியை உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
பள்ளியை மறுசீரமைக்க...
இதனிடையே பள்ளி நிர்வாகமும் பள்ளியை மறுசீரமைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பில் 45 நாட்களில் பள்ளியை மறுசீரமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் வந்து பள்ளிக்கூடத்தை பார்வையிட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் மறுசீரமைப்புக்கு பிறகு பள்ளி கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்தும், பள்ளிக்கூடத்தை திறக்கலாமா?, மாணவர்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்பு உள்ளதா?, திறப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். காலை முதல் மாலை வரை நடந்த ஆய்வு குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்குவோம் என்று கோட்டாட்சியர் பவித்ரா தெரிவித்தார்.