மண் கொள்ளை அடிப்பது தடுக்கப்படுமா?


மண் கொள்ளை அடிப்பது தடுக்கப்படுமா?
x

இரவு நேரங்களில் வாகனங்களில் மண் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

இரவு நேரங்களில் வாகனங்களில் மண் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியாக விளங்கும் பேராயம்பட்டு, வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், பழையனூர், ஆத்திபாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் இரவு நேரங்களில் மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பேராயம்பட்டு மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரம் முதல் இரவு முழுவதும் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு செல்வதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூக்கம் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அனுமதி

பொதுவாக ஏரிகளில் மண் அள்ளுவதற்கும் மற்ற இடங்களில் முரம்பு மண் உள்ளிட்டவைகள் எடுப்பதற்கும் வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 நடை மண் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் இப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் மண் அள்ளிக் கொண்டு சென்று வருகின்றனர்.

மண் தொடர்ந்து அள்ளப்படுவதை தடுப்பது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, நீங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள் என்கின்றனர்.

அலட்சியம்

இதே போல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று அலட்சியம் செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருவது மட்டுமல்லாமல் காலை முதல் மாலை வரை விவசாய நிலங்களிலும் கூலி வேலைகளுக்கும் சென்று வரும் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story