நடைபாதையில் மண் குவியல் அகற்றப்படுமா?


நடைபாதையில் மண் குவியல் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண் குவியல் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண் குவியல் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நடைபாதையில் மண் குவியல்

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான நடைபாதை உள்ளது. இதில் கிளை நூலகம் முன்பு செல்லும் நடைபாதையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது.

அப்போது கிளை நூலகத்தின் வளாகத்தில் இருந்த மண் மேடு இடிந்து நடைபாதையில் விழுந்தது. இதனால் மழைக்காலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் இறங்கி நடந்து சென்று வந்தனர். இதனால் வாகன விபத்துகளில் சிக்கும் அபாயம் இருந்தது. இதைத் தொடர்ந்து நடைபாதையில் கிடக்கும் மண் குவியல்களை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் அவதி

இதனால் பெயரளவிற்கு மண் அகற்றப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் நடைபாதையின் ஒருபுறம் நடந்து சென்றனர். தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டது. இருப்பினும், நடைபாதையில் குவிந்து கிடக்கும் மண் முழுமையாக அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அகலமாக இருந்த நடைபாதை, குறுகலாக மாறி உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நடைபாதையில் மண் குவியல்களை முழுமையாக அகற்றாததால் பெண்கள், மாணவிகள் நடந்து செல்லும் போது எதிரே வரும் நபர்கள் நடந்து செல்ல முடியாமல் ஒருவரை ஒருவர் உரசி செல்லும் நிலை உள்ளது. மேலும் சிலர் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story