தஞ்சை மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கலா?
திருவண்ணாமலையில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் தஞ்சைக்கு வந்து பதுங்கி உள்ளனரா? என போலீசார் 48 இடங்களில் தீவிர வாகன சாதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் தஞ்சைக்கு வந்து பதுங்கி உள்ளனரா? என போலீசார் 48 இடங்களில் தீவிர வாகன சாதனையில் ஈடுபட்டனர்.
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கியாஸ் வெல்டிங் மூலம் மர்ம நபர்கள் எந்திரங்களை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்து விட்டு காரிலேயே தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அனைத்து மாவட்டங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினர்.
48 இடங்களில் சோதனை
அதன் பேரிலும் தஞ்சை மாவட்டத்திற்குள் கொள்ளையர்கள் வந்துள்ளனரா? என போலீசார் நேற்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லைப்பகுதியில் சோதனை சாவடி அமைத்தும், அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
தஞ்சையில் 8 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். கார்.வேன். இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் கொண்டு வந்த உடமைகளை முழுவதுமாக சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
பழைய பஸ் நிலையம்
தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, சோழன்சிலை ஆகிய பகுதிகளில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.