கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் மணல் கொள்ளை தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் மணல் கொள்ளை தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள ஆரம்பூண்டியில் கோமுகி ஆறு உருவாகிறது. இந்த ஆற்று தண்ணீர், வெள்ளிமலை, கல்படை, மல்லிகைப்பாடி மட்டப்பாறை ஆகிய ஊர்களின் வழியாக கல்வராயன்மலை அடியில் உள்ள கோமுகி அணைக்கு வருகிறது. இந்த தண்ணீரை கோமுகி அணையில் சேமித்து வைத்து ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.
இந்த நிலையில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில், மட்டப்பாறை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கோமுகி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை எடுத்து ஒரு பகுதியில் குவித்து வைக்கின்றனர். பின்னர் இரவு நேரத்தில் டிராக்டர், மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்று மணலை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தடுக்கப்படுமா?
இதனால் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமின்றி, கரைகள் இடிந்து ஆற்றுக்குள் விழுவதால் தண்ணீர் செல்வதிலும் தடை ஏற்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.