டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி


டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x

டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசிடம் கேட்டுள்ளது.

சென்னை,

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், சாலைகளில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த பதில்மனுவில், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.


Next Story