கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?


கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?
x

கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரிக்குளம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது. இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அந்த பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது. ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. இதனால் குளத்தை ஆகாய தாமரை செடிகள், கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தின் படிக்கட்டுகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன்கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

ஆகாய தாமரையை அகற்ற வேண்டும்

கரிக்குளத்தை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கிராம மக்கள் பக்கத்தில் உள்ள ஆற்றிற்கு சென்று குளித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அந்்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story