கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
பருவமழை காலம் தொடங்கும் முன், கோலியனூரான் வாய்க்காலை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகரில் இ.எஸ். கார்டன் பகுதியில் இருந்து தொடங்கி சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை வழியாக கோலியனூரான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீர், மருதூர் ஏரி மட்டுமின்றி கண்டியமடை, வளவனூர் உள்ளிட்ட 6 ஏரிகளுக்கு செல்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கோலியனூரான் வாய்க்காலில் கலக்கிறது.
இப்படியிருக்க இந்த வாய்க்காலை அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்தினர் முறையாக தூர்வாரி சீரமைப்பதில்லை. இதன் விளைவாக கோலியனூரான் வாய்க்காலில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளாக குவிந்து கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி குட்டைபோல் தேங்கியுள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
குறிப்பாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கோலியனூரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி குட்டைபோல் தேங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர், அவ்வப்போது இந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தண்ணீர், தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். ஆனால் அப்பணியை செய்ய நகராட்சி நிர்வாகம் தவறுவதால் அங்கு கடை நடத்தி வரும் பலரும் குப்பைகளை, கோலியனூரான் வாய்க்காலிலேயே கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி சில குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரும், இந்த கோலியனூரான் வாய்க்காலில் கலக்கிறது.
ஆனால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்காததால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கியே நிற்பதால் அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூர்வாரப்படுமா?
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து வாய்க்காலை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது கோலியனூரான் வாய்க்காலின் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏறபட்டுள்ளது. கடந்த ஆண்டு அவசர கதியில் வாய்க்காலை தூர்வாரியதும், அதன் பிறகு அவ்வப்போது தூர்வாராமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் இருப்பதாகவும் நகர மக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே எதிர்வரும் பருவமழை காலத்திற்குள் கோலியனூரான் வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த வாய்க்காலில் மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்கவும், வாய்க்காலுக்குள் யாரேனும் தவறி விழாமல் இருக்கும் வகையிலும் சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.