பெரிய குளத்தில் சேதமடைந்துள்ள குழுமி சீரமைத்து தூர்வாரப்படுமா?


பெரிய குளத்தில் சேதமடைந்துள்ள குழுமி சீரமைத்து தூர்வாரப்படுமா?
x

கிடவன்குடியில் பொதுப்பணித்துறை பாசன குளத்தில் உள்ள சேதமடைந்த குழுமியை சீரமைத்து தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

பெரியகுளம்

விராலிமலை ஒன்றியம், கத்தலூர் ஊராட்சிக்குட்பட்ட கிடவன்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன குளமான பெரியகுளம் உள்ளது. விராலிமலை-கீரனூர் சாலையோரத்தில் அமைந்துள்ள இக்குளத்தின் பரப்பு 92 எக்டேர் ஆகும். இந்த குளத்தின் மூலம் 150 எக்டேர் விவசாய நிலம் நீர்பாசன வசதி பெறுகிறது. 40 வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்ட இந்த குளத்தில் தேங்கும் மழை நீரானது கிடவன்குடி கிராமத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களில் 3 போகமும் விவசாயம் செய்து விவசாயிகள் வளமுடன் இருந்து வந்துள்ளனர்.

தண்ணீர் வீணாக வெளியேறியது

ஆனால் தற்போது அந்த குளம் தூர்ந்து காணப்படுவதால் குறைந்த அளவே மழை நீரை தேக்கி வைக்க முடிகிறது. குளத்து பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குளத்து தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா பருவம் முடிந்து குறுவை பருவத்தில் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் கிடவன்குடி குளத்தில் 3 குழுமிகள் உள்ளன. இதில் அதிக அளவிலான நிலங்களுக்கு நீர் பாய்ச்சக்கூடிய நடுக்குழுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்து குளத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் நேரத்தில் அந்த குழுமி வழியாக தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தது.

அதிகாரிகள் ஆய்வு

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கன மழையின்போது குளத்தில் மழை நீர் நிரம்பி வழிந்தது. அப்போது சேதமடைந்திருந்த நடுக்குழுமி வழியாக தண்ணீர் அதிகளவில் வீணாக வெளியேறியதுடன் குளத்தின் கரைப்பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்தனர். அதனைத்தொடர்ந்து இதுகுறித்து அப்போது கிடவன்குடி கிராமமக்கள் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த விராலிமலை தாசில்தார், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் நடுக்குழுமி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருப்பதை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் தண்ணீர் வற்றியதும் சேதமடைந்த குழுமியை புதிதாக கட்டிக் கொடுப்பதற்கும், குளத்தை தூர் வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு சென்றனர்.ஆனால் 2 வருடம் ஆகியும் தற்போது வரை சேதமடைந்த குழுமியை சீரமைக்கவும், குளத்தை தூர் வாரவும் அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை.

கோரிக்கை

இதுகுறித்து கிடவன்குடி கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தற்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கிடவன்குடி நீர் பாசன குளத்தில் சேதமடைந்துள்ள நடுக்குழுமியை அகற்றிவிட்டு புதிதாக குழுமி கட்டித்தரவும், தூர்ந்து போய் உள்ள குளத்தை தூர்வாரி அதிக அளவில் மழைநீர் சேமித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிடவன்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

குளத்தை தூர்வார வேண்டும்

கிடவன்குடியை சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன்:- நான் இந்த குளத்தில் தேங்கும் மழை நீரை நம்பி தான் எனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி இருந்தது. தற்போது குளம் தூர்ந்து காணப்படுவதால் குறைந்த அளவே மழை நீரை தேக்கி வைக்க முடிகிறது. அந்த நீரும் சேதமடைந்துள்ள நடுக்குழுமி வழியாக அதிக அளவில் வீணாக வெளியேறுவதால் இருபோகம் விவசாயம் செய்ய முடிவதில்லை. மேலும் குளத்தின் நீர் பிடிப்பு பகுதியை குளத்தாத்துப்பட்டியை சேர்ந்தவர்கள் 14 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். அதேபோல குளத்தாத்துப்பட்டியில் குடியிருந்து வருபவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் குளத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடு கட்டி இருப்பதால் குளத்தில் நீர் பெருகும் போது அவர்களது வீட்டை தண்ணீர் சூழ்ந்து கொள்ளும். அப்போது அவர்கள் குளத்தின் கடைசி கரையோர பகுதியில் வெட்டி தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர். எனவே கிடவன்குடி குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி அதிக அளவில் மழைநீரை தேக்கி வைக்கவும், சேதம் அடைந்துள்ள நடுக்குழுமியை அகற்றிவிட்டு புதிதாக குழுமி அமைத்து தரவும் புதுக்கோட்டை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழுமியை சீரமைக்க வேண்டும்

கிடவன்குடியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி:- கிடவன்குடி பெரிய குளத்தில் மூன்று குழுமிகள் உள்ளது. அதில் கிழக்கு பகுதியில் உள்ள குழுமியும், நடுக்குழுமியும் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைத்து குளத்தை தூர்வாரி கொடுத்தால் குளத்தில் அதிக அளவில் மழை நீரை தேக்கி 3 போகமும் விவசாயம் செய்து பயனடைய முடியும். எங்களது குளத்தை தூர்வாரி சேதமடைந்த குழுமியை சீரமைத்து கொடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இனிமேலாவது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிடவன்குடியை சேர்ந்த விவசாயி கணேசன்:- சிறு விவசாயியான நான் இந்த குளத்து நீரை நம்பி தான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த வருடம் குறைந்த அளவே மழை பெய்ததால் குளத்தில் 50 சதவீத அளவிற்கு மட்டுமே மழை நீர் தேங்கி இருந்தது. அதனால் குளத்து நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரத்து வாய்க்காலை தூர்வாரியும், சேதமடைந்துள்ள குழுமியை அகற்றிவிட்டு புதிய குழுமி அமைத்து கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story