என்னை எதிர்த்துப் பேசுபவர்கள் முழுமையாக தமிழில் பேச முடியுமா - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
என்னை எதிர்த்துப் பேசுபவர்கள் முழுமையாக தமிழில் பேச முடியுமா என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தனியார் கேரளா ஆயுர்வேதிக் சிகிச்சை மருத்துவமனையை புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திரவ்பதி முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அதிகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியை ஊக்கப்படுத்துவதற்காக தான் பிரதமர் கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கையால் இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் நான் கூறினேன்.
ஆனால் இந்தியை பற்றி கூறுகிறேன் என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் தமிழகத்தில் ஏன் இவர் வாலை நீட்டுகிறார் என்று கேட்கிறார்கள்.
எனது உயிர் தமிழகத்தில் தான் போகும், நான் ஒரு தமிழச்சி வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாக தான் சென்றுள்ளேன். தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதை பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு.
எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் உள்ளது. என்னை எதிர்த்துப் பேசுபவர்கள் முழுமையாக தமிழில் பேச முடியுமா. கம்பர் ராமனை பற்றி பேசியதாலேயே கம்பராமாயணம் மட்டுமல்ல கம்பரும் மறைக்கப்படுகிறார், மறுக்கப்படுகிறார்.
நாம் கம்பரையும் போற்ற வேண்டும், திருவள்ளுவரையும் போற்ற வேண்டும். கம்பராமாயணத்தையும் போற்ற வேண்டும். புதுச்சேரியில் துணைநிலை கவர்னரும் முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் கிடையாது. அரசியல் அமைப்பில் கவர்னருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ஆக்க கூடாது என்பது தான் எனது கருத்து. பட்டமளிப்பு விழாவையே அரசியல் ஆக்குகிறார்கள், மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.