பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மானியம் கிடைக்குமா?
அழிவில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மானியம் கிடைக்குமா? என்று கூடலூர் விவசாயிகள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
அழிவில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மானியம் கிடைக்குமா? என்று கூடலூர் விவசாயிகள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
பாரம்பரிய நெல் விவசாயம்
கூடலூரில் பச்சை தேயிலை விவசாயம் மட்டுமின்றி குறுமிளகு, காபி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களும் விளைகிறது. இது தவிர காய்கறிகள், வாழை விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜூன் மாதம் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்கிறது. இதை பயன்படுத்தி பாரம்பரிய நெல் விவசாயமும் நடைபெற்று வருகிறது.
இதனால் நீலகிரியின் நெற்களஞ்சியம் என்று கூடலூர் அழைக்கப்படுவதுண்டு. சேற்று வாலி, கரி வாலி, மர நெல், கோதண்டம், வெறும்பாலை, கூரிச்ச சன்னை, பால சன்னை, கெந்தக சாலை, சிந்தாமணி என 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தது. மணமும், ருசியும் கொண்ட ரகங்கள் என்பதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் பாரம்பரிய ரக அரிசியை வாங்கி வந்தனர். தொடர்ந்து கேரள வியாபாரிகளும் கூடலூர் விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து வந்தனர்.
மானியம் வழங்கப்படுமா?
ஆனால் உழைப்புக்கு ஏற்ற கொள்முதல் விலை கிடைக்காததால் பல ஆண்டுகளாக நெல் விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் கூறி வருகின்றனர். செலவினத்துக்கு ஏற்ப வருவாய் கிடைக்காததால் பாரம்பரிய ரகங்களை பயிரிடுவதை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதன் காரணமாக கூடலூர் பகுதியில் நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.
இதேநிலை நீடித்தால் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் விவசாயம் முழுமையாக அழியும் அபாயத்தில் உள்ளது. இதனால் சமவெளி பகுதியில் நெல் விவசாயத்துக்கு மானியம் வழங்குவது போல் மலை மாவட்டத்துக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூடலூர் நெல் விவசாயிகள் கூறுவதை பார்க்கலாம்.
பயிர் காப்பீடு
பாடந்தொரை ரகுநாதன்:-
கூடலூர் பகுதியில் நெல் சாகுபடி ஒரு காலத்தில் சிறப்பாக இருந்தது. தோட்டக்கலைத்துறை அலுவலகத்தின் கணக்கீன் படி 133 ஹெக்டர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் விலையோ அடிமாட்டு விலைக்கு எடுக்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் நெல்லுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.
ஆனால், கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு எந்த சலுகைகளும் வழங்குவது இல்லை. நடவு, விதை, அறுவடை என எந்த மானியமும் இதுவரை வழங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பயிர் காப்பீடு பட்டியலில் நெல் இல்லை. பல கோரிக்கைகள் அனுப்பியும் இதுவரை முடிவு ஏற்படவில்லை. இதனால் நெல் விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும் நஷ்டம்
முன்டக்குன்னு ஆனந்த்:-
கடந்த ஆண்டு நெல் விவசாயம் 3 ஏக்கர் பரப்பளவில் செய்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தேன். நோய் தாக்குதல், வனவிலங்குகள் தொல்லை உள்பட பல்வேறு காரணங்களால் நடப்பு ஆண்டில் நெல் விவசாயம் மேற்கொள்ளவில்லை. ஒரு காலத்தில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் நெல் விவசாயம் நடைபெற்றது.
இதனால் ஒவ்வொரு ஊர்களுக்கும் பின்னால் வயல் இடம் பெற்றது. தற்போது பாரம்பரிய நெல் ரகங்கள் பெரும்பாலானவை அழிந்து விட்டது. அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமவெளி பகுதியில் கிடைப்பது போல் நெல் விவசாயத்துக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறுவடை திருவிழா
புத்தூர்வயல் கோவிந்தன்:-
காலங்காலமாக பல தலைமுறைகளாக பாரம்பரிய நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நெல் விவசாயத்தில் போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலானவர்கள் நெல் விவசாயத்தை கைவிட்டு வாழை, பாக்கு போன்ற பிற விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
நெல் விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்ற சூழலில் பாரம்பரிய நெல் ரகங்களும் அழிந்து வருகிறது. தொடர்ந்து கூடலூர் பகுதியில் கொண்டாடப்படும் புத்தரி என்ற நெல் அறுவடை திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் களை இழந்து வருகிறது. குறிப்பாக விவசாயம் மற்றும் அதை சார்ந்த பண்டிகைகளும் அழியும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மானியம் வேண்டும்
அத்திப்பாளி ஒடுக்கண்:-
பூர்வீகமாக நெல் விவசாயம் நடைபெற்று வந்த கூடலூர் பகுதியில் பல்வேறு காரணங்களால் மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயத்தை கைவிடும் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக வயல் பரப்பு சுருங்கி வருகிறது. தொடர்ந்து நெல் அறுவடை திருவிழா (புத்தரி) உள்ளிட்ட பண்டிகைகளை வரும் காலங்களில் கொண்டாட முடியாத நிலை ஏற்படுமோ? என அச்சமாக உள்ளது.
எனவே பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க வேண்டும். நெல் விவசாயத்துக்கு மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.