அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்புகள் அகற்றப்படுமா?
திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி
திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் இணைப்பு
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உரிய அனுமதியின்றி பலர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய்களை அமைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆதலால் நகராட்சிக்கு வர வேண்டிய குடிநீர் வரிகள் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தங்கல் நகராட்சி பகுதி சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் வரி இனங்களை மாநகராட்சி அதிகாரிகள் சரி பார்த்த போது 500-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையின்றி அமைத்தது தெரியவந்தது.
அனுமதி இல்லை
இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் உரிய அனுமதியின்றி பெற்ற குடிநீர் குழாய்கள் பல தற்போது வரை பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேரில் ஆய்வு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் அந்த பகுதியில் செய்யப்படும் குடிநீர் வினியோக நாட்களின் இடைவெளி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.