தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் சீரமைப்பு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
உடன்குடி:
தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அணைகளில் இருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதியிலுள்ள எல்லப்பநாயக்கன்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வரும்.
தற்போது தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் இக்குளத்திற்கு சீராக தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தண்டுபத்தில் வைத்து, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி வட்டார பகுதி நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியுள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் குளங்களை நிரப்பினால், நிலத்தடி நீர் மற்றும் கிணற்று பம்பு செட் விவசாயம் செய்யும தண்ணீரீன் தன்மை மாறாமல் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் எல்லப்பநாயக்கன் குளத்திலிருந்து தருவைகுளம் பகுதி வரை சிதிலமடைந்த நீர்வழித்தடங்களை சீரமைக்கவும், புதியதாக உடன்குடி ஊரணிக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தார்.
மழைக்காலங்களில் வடிகால் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்கும் வகையில் நீர்வழித்தடங்கள் அமைக்கும் பணியினை உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமூக ஆர்வலர் ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோ கணேசன், வக்கீல் செல்வகுமார் உள்பட சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் பலர் உடன் சென்றனர்.
இதற்கிடையே தனது சொந்த செலவில் கால்வாய் சீரமைப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த அமைச்சரை விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.