ஊட்டியில் குதிரை பந்தயம் ரத்து
தொடர் மழையால் ஓடுதளம் சேதமடைந்ததால் ஊட்டியில் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் ஊட்டியில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உள்பட 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்றனர். முக்கிய பந்தயங்களான கடந்த 7-ந் தேதி தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் போட்டி மே 1-ந் தேதி, தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ் போட்டி மே 26-ந் தேதி நடந்தது. மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதமடைந்தது. இதனால் நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.