19 கிராம உதவியாளர்கள் பணி நியமன உத்தரவு ரத்து


19 கிராம உதவியாளர்கள் பணி நியமன உத்தரவு ரத்து
x

கீழ்வேளூர் தாலுகாவில் 19 கிராம உதவியாளர்கள் பணி நியமன உத்தரவை ரத்து செய்து கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் தாலுகாவில் 19 கிராம உதவியாளர்கள் பணி நியமன உத்தரவை ரத்து செய்து கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

கிராம உதவியாளர்கள் நியமனம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அளவில் 19 கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடந்த ஆண்டு(2021) செப்டம்பர் மாதம் விண்ணப்பம் செய்து இருந்தனர். விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.இந்த நேர்காணலில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட 19 கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் நாகை, திருக்குவளை, வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்தவர்கள் கிராம உதவியாளராக கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி அன்று பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த பணி நியமன விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

19 பேர் பணி நியமனம் ரத்து

இந்த பணி நியமன விவகாரம் குறித்து நாகை மாவட்ட கலெக்டரிடம் ஏராளமானோர் புகார் கொடுத்தனர். மேலும் ஒருவர் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டது.இந்த நிலையில் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி கிராம உதவியாளர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை என்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் 19 கிராம உதவியாளர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.இந்த பணி நியமன ரத்து உத்தரவை 19 பேரும் வாங்காத நிலையில் அவர்கள் வீட்டில் பணி நியமன ரத்து உத்தரவு ஒட்டப்பட்டது.



Next Story