2 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து


2 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
x

நாகர்கோவிலில் 267 பள்ளி வாகனங்களை சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 2 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 267 பள்ளி வாகனங்களை சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 2 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வுப்பணி

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை 17-ந் தேதி (அதாவது நேற்று) நாகர்கோவில் கன்கார்டியா பள்ளிக்கு கொண்டு வந்து சிறப்பு குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் ஆய்வுப்பணி நேற்று காலையில் இருந்து மதியம் வரை நடந்தது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இதனை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

267 வாகனங்கள் ஆய்வு

தமிழ்நாடு மோட்டார் பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012 - ன் படி ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 79 கல்வி நிறுவனங்களின் 341 வாகனங்களை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 267 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

தகுதிச்சான்று ரத்து

நேற்று ஆய்வு செய்யப்பட்ட 267 வாகனங்களில் முதலுதவிப் பெட்டி இல்லாதது, கண்காணிப்புக் கேமரா இணைப்பு கொடுக்காதது, கைபிடி கம்பி பொருத்தாதது உள்ளிட்ட சிறு, சிறு குறைபாடுகளுக்காக 47 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. அந்த குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஓட்டுனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஒரு பள்ளி வாகனத்தில் அவசர வழி (எமர்ஜென்சி எக்சிட்) பாதை விசாலமாக இல்லாமல், குறுகலாக அமைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு பள்ளி வாகனம் தகுதிச்சான்று ஆய்வுக்கு (எப்.சி.) உட்படுத்தப்படாமல் ஒர்க்‌ஷாப்பில் இருந்து நேரடியாக இந்த ஆய்வுக்கு கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இந்த இரண்டு வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.


Next Story