வணிகவரித்துறை ஊழியர் இடமாற்றம் ரத்து


வணிகவரித்துறை ஊழியர் இடமாற்றம் ரத்து
x

3 மாதத்தில் பல முறை இடம் மாற்றியதை எதிர்த்து வழக்கில் வணிகவரித்துறை ஊழியர் இடமாற்றம் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

திண்டுக்கல் மாவட்ட வணிக வரித்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் முத்துப்பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் மாநில வணிகவரி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். 12.3.2022 அன்று என்னை தேனி வணிகவரி அலுவலகத்தில் இருந்து, சிவகங்கை அலுவலகத்திற்கு மாற்றினர். அதன் பின் உள்நோக்கத்துடன், 28.3.2022 தேதியிட்ட உத்தரவு மூலம் நான் மீண்டும் போடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். 3 நாட்களுக்குள், மீண்டும் எனது பணியிடமாற்றம் ரத்து செய்யப்பட்டது. நான் மீண்டும் 1.4.2022 அன்று சிவகங்கை அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.

அதன்பிறகு, அந்த உத்தரவு வந்த ஒரு மாதத்திற்குள், மீண்டும் திண்டுக்கல் டவுன் சரக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன். 4.5.2022 தேதியிட்ட உத்தரவின்படி, மறு உத்தரவு வரும் வரை, போடியில் பணிபுரிய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் 30.5.2022 அன்று, நான் மீண்டும் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டேன். 16.6.2022 அன்று மீண்டும் சிவகங்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளேன். கடந்த 3 மாதங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட பணியிடமாறுதல் பெற்றுள்ளேன். நிர்வாகக் காரணங்களுக்காக, இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது என கூறுகின்றனர். இது சட்ட விரோத நடவடிக்கை. இதனால் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகி உள்ளேன்.

எனவே 16.6.2022 அன்று எனது இடமாறுதல் தொடர்பாக, வணிகவரித்துறை இணை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரை 3 மாதங்களுக்குள் 5 முறைக்கும் மேலாக இடமாறுதல் செய்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் அவரை இடமாறுதல் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story