15 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து


15 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து
x

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வில் 15 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வில் 15 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.

பள்ளி வாகனங்கள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது:-

வாகன ஓட்டுனர் என்பது பெரிய பொறுப்புடன் கூடிய பதவியாகும். பள்ளி வாகன ஓட்டுனர்கள் செயல்பாடுகளை பள்ளி குழந்தைகள் நன்றாக கவனித்து பிற்காலங்களில் தங்களது வாகனங்களை இயக்குவார்கள். எனவே, ஓட்டுனர்கள் அனைத்து சாலை விதிகளையும் பின்பற்றி குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அரசு பஸ் ஓட்டுனர் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் விபத்து இல்லாமல் சாலை பயணம் மேற்கொள்ள அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குடும்பத்துடன் வாகன பயணம் மேற்கொள்ளும் போது அலைபேசி பயன்படுத்தாமல் முழு கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,065 அரசு பள்ளிகள் மற்றும் 468 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,533 பள்ளிகள் உள்ளன. இதன்படி மாவட்டத்தில் உள்ள 727 தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால கதவு, வாகன இருக்கைகள், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டியில் மருந்துகள், வாகனத்தின் படிக்கட்டுகள், வாகனத்தின் முன்பின் பள்ளி வாகனம் என்ற வாசகம், பக்கவாட்டில் பள்ளி முகவரி மற்றும் தொலைபேசி எண், சரக காவல் தொலைபேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண் எழுதப்பட்டுள்ளதா, வாகனத்தின் உட்புற பலகைகள் நல்ல நிலையில் உள்ளதா, டயர்கள், பிரேக்குகள் வாகனத்தினுடைய இதர எந்திர பயன்பாடுகள் நல்ல நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்படும். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த வாகனத்தின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதனை சரி செய்த பின்பு தான் வாகனத்தினை இயக்க அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு பேசினார்.

தகுதிச்சான்று ரத்து

இதனை தொடர்ந்து விபத்தில்லா பயணம் மேற்கொள்வதற்கான உறுதிமொழி கலெக்டர் தலைமையில் வாகன ஓட்டுனர்கள் எடுத்துக்கொண்டனர். பள்ளி வளாகத்தில் டிரைவர்களுக்கான கண் பார்வைத்திறன் பரிசோதனை நடைபெற்றது.

இதைதொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 15 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதன் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story