இரவு நேர டவுன் பஸ்கள் ரத்து; கிராம மக்கள் சாலை மறியல்
மேலூரில் இரவு நேர டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர்
மேலூரில் இரவு நேர டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மேலூரில் அரசு போக்குவரத்து கிளை உள்ளது. இங்கிருந்து சுற்று பகுதிக்கு 53 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் மதுரைக்கு மட்டும் டவுன் பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறது. பிற வழித்தடங்களில் டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலான டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனால் பாதிப்படைந்த திருப்புவனம், கொட்டகுடி, பனங்காடி, சேக்கிபட்டி, மதகுபட்டி, உரங்கான்பட்டி, சிவகங்கை, பனங்காடி, சருகுவலையபட்டி, சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, சிறுகுடி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் இரவு வரை காத்திருந்தும் டவுன் பஸ்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அவர்கள் ஆத்திரமடைந்து மேலூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இவர்களிடம் மேலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து டவுன் பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் டவுன் பஸ்களை வரவழைத்து மறியல் செய்த மக்களை அனுப்பி வைத்தனர்.
இனிமேலும் இரவுநேர டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாவிட்டால் பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.