தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து


தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து
x

படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணத்தை சப்-கலெக்டர் கவுசிக் ரத்து செய்தார்.

கன்னியாகுமரி

தக்கலை

படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணத்தை சப்-கலெக்டர் கவுசிக் ரத்து செய்தார்.

படுத்த படுக்கையில் தந்தை...

மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை பகுதியில் வசித்து வருபவர் ஜான் தாமஸ் (வயது 75). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருடைய மனைவி தவசி கனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. சென்னையில் மகளும், கோவையில் மகனும் வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 2017-ல் ஜான் தாமஸ் பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அந்த காலக்கட்டத்தில் ஜான் தாமஸ் தன்னுடைய பெயரில் இருந்த வீடுடன் கூடிய 1 ஏக்கர் 37 சென்ட் இடத்தை அவருடைய மகனுக்கு எழுதி கொடுத்தார்.

ஜான் தாமசை அவருடைய மனைவி தவசி கனியம்மாள் கவனித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு தவசி கனியம்மாள் இறந்து விட்டார்.

துன்புறுத்திய மகன்

இதனை தொடர்ந்து தந்தையை கவனிக்க அவருடைய மகன் பணியாளர் ஒருவரை நியமித்தார். தந்தையின் ஓய்வூதிய பணத்தையும் பெற்று அதிலிருந்து அந்த பணியாளருக்கு சம்பளமாக கொடுத்தார்.

இந்தநிலையில் மகன் கோவையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதை தட்டி கேட்ட பணியாளரையும் தாக்க முயற்சித்திருக்கிறார். இதனை அறிந்த ஜான்தாமஸ் மகள் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்து பணியாளரை சமாதானம் செய்தார். ஆனால் அதன் பிறகும் படுத்த படுக்கையில் உள்ள தந்தை என்றும் பாராமல் மகன் துன்புறுத்தியதாக தெரிகிறது.

சொத்து ஆவணம் ரத்து

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அன்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு தீப்பாயத்தில் மகன் என்னை பராமரிக்காமல் துன்புறுத்தி வருவதாக ஜான் தாமஸ் புகார் கொடுத்தார். இதனை பரிசீலனை செய்த தீர்ப்பாயத்தின் நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் கடந்த மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு அழைத்தார். இதில் ஜான் தாமஸ் படுக்கையாக இருப்பதால் அவர் தரப்பில் அவரது மகளும், எதிர்தரப்பில் மகனும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அழகன் பாறையில் உள்ள வீட்டில் படுக்கையாக இருந்த ஜான் தாமசை நேரில் சந்தித்து அவரிடமும் சப்-கலெக்டர் கவுசிக் விசாரித்தார்.மேலும் போலீஸ் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகளும் இருந்தன. விசாரணை முடிவில், தந்தையை துன்புறுத்தியதும், அவரை பராமரிக்க தவறியதும் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 2017-ல் மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜான் தாமஸ் தன்னுடைய மகன் பெயருக்கு எழுதி கொடுத்த வீடுடன் கூடிய 1 ஏக்கர் 37 சென்ட்டுக்கான சொத்து ஆவணத்தை ரத்து செய்து சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நேற்று சப்-கலெக்டர் கவுசிக் நேரடியாக சென்று ஜான் தாமஸிடம் வழங்கினார்.


Next Story