புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்கருத்தரங்கில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் பேச்சு
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கருத்தரங்கில் டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.
நாகர்கோவில்:
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கருத்தரங்கில் டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.
கருத்தரங்கு
உலக புற்றுநோய் தினத்தையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை டீன் பிரின்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார். புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வழியாக கருத்தரங்க அறையை சென்றடைந்தது.
பின்னர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை டீன் பிரின்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் டீன் பிரின்ஸ் பயஸ் பேசும்போது கூறியதாவது:-
தடுக்கலாம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாதம் ஒன்றுக்கு 500 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 20 நோயாளிகளுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 100 பேருக்கு கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அதனை கட்டுப்படுத்தி விடலாம், குணப்படுத்தவும் செய்யலாம். புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கங்களை கைவிட்டு, சிறந்த, பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன்மூலமும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். குமரி மாவட்ட புற்றுநோயாளிகள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவையும், கீமோ தெரப்பி சிகிச்சைகளையும் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நல உதவிகள்
இந்த பேரணி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ஜெயலால், ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) விஜயலட்சுமி, புற்றுநோய் அறுவை சிகிச்சைத்துறை சிறப்பு மருத்துவர்கள் பிரனீத், பிரைட்சிங், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருத்துவ மாணவ- மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.