மூதாட்டியின் வயிற்றில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்
மூதாட்டியின் வயிற்றில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மூதாட்டியின் வயிற்றில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புற்றுநோய் கட்டி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது65). கடந்த 3 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள சினைப்பையில், புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை
இந்த நிலையில் ராஜம்மாள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாலும், அவருக்கு போதிய ரத்தம் இல்லாமலும், ஜுரம் இருந்த காரணத்தினாலும், 10 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில், அவருடைய வயிற்று வலி, காய்ச்சல் குறைந்த பிறகு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அன்பழகன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா வெங்கடேஷ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், மகப்பேறு டாக்டர் மீனா, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் சுதாகர் மற்றும் குழுவினர், ராஜம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த 5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றினர்.
பகுப்பாய்வு
இதையடுத்து பிரச்சினைக்குரிய புற்றுநோய் கட்டி மற்றும் கர்ப்பப்பை, புற்றுநோய் பரவியிருக்க வாய்ப்புள்ள நிணநீர் முடிச்சுகள், அசுத்த நீர் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவுகள் வந்ததில், சினைப்பையில் புற்றுநோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் செல்கள் சினைப்பையில் மட்டும் இருந்ததையும், மற்ற உறுப்புகளுக்கு பரவாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ராஜம்மாள் தீவிர கண்காணிப்பு வார்டில் வைக்கப்பட்டு, உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
டாக்டர்களுக்கு பாராட்டு
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், 'அறுவை சிகிச்சைக்கு பிறகு ராஜம்மாள் நலமுடன் உள்ளார். வரும் நாட்களில் புற்றுநோயின் தாக்கம், மற்ற எந்த உறுப்புகளிலும் உள்ளதா? என தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்' என்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி, மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 5 கிலோ புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்த டாக்டர்களுக்கு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் திலகம் பாராட்டு தெரிவித்தார்.