கரும்பு வெட்டுக்கூலியை சர்க்கரை ஆலைகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்


கரும்பு வெட்டுக்கூலியை சர்க்கரை ஆலைகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்
x

கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

வெட்டுக்கூலி

வாணியம்பாடி அருகே உள்ள கிரிசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடு நடக்கிறது. மகாசபை கூட்டம் நடத்துவகே கிடையாது. கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்பூர் பெரியவரிகம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால், பெரிய அளவில் மழை பெய்தும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஏரி நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரியின் விவசாய உதவித்தொகை பெற்று வந்த விவசாயிகளுக்கு தற்போது உதவித்தொகை வருவதில்லை. இதுகுறித்து கேட்டால் அதிகாரிகள் சரியான பதில்களை தருவதில்லை. அதில் உள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. ஆட்களும் கிடைப்பதில்லை. வெட்டுக்கூலியும் அதிகமாக ஆகிறது. மேலும் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டி உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வெட்டுக்கூலியை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும். டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது. இதனால் அப்பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் செல்கிறது. ஆனால் சில ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது. எனவே ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

தடுப்பு மருந்துகள்

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருந்தழை பூச்சிகளால் தென்னை ஒலை காய்ந்து இருப்பதை கூட்டத்தில் காட்டி கலெக்டரிடம் வழங்கி பேசுகையில் ஆம்பூர், மாதனூர் பகுதியில் தென்னை மரங்களை கருந்தழை பூச்சிகள் அதிகமாக தாக்குகிறது. இதனால் தென்னை ஒலை கருகி விளைச்சல் குறைகிறது. தேங்காய் விவசாயம் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களை தாக்கும் நோய்களை தடுக்க தகுந்த தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பதில் அளித்து பேசியதாவது:-

புதுப்பிக்க வேண்டும்

கூட்டுறவு வங்கியில் நிலவும் பிரச்சினைகளுக்கு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டு விட்டது. மற்ற குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதில் தவறு இருந்தால் பணம் வராமல் இருக்கலாம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் 9,500 விவசாயிகள் இன்னும் பதிவை புதுப்பிக்கவில்லை.

மாவட்டத்தில்நீர்நிலை ஆக்கிரம்புகள் 75 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். மாவட்ட அளவிலான பசுமைக்குழுவின் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த மரத்தையும் வெட்ட முடியும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்து அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்செல்வராசு, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண் விற்பணை துணை இயக்குனர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story