லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்த ஒற்றை யானை
லாரியை வழிமறித்த யானை
ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து கரும்புகளை ஒற்றை யானை சுவைத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
கரும்பு லாரியை வழிமறித்தது
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டு இருந்தது. ஆசனூரை அடுத்த காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் சென்றபோது ரோட்டோரம் நின்ற ஒற்றை யானை கரும்பு லாரியை நோக்கி ஓடி வந்தது. பின்னர் லாரியை வழிமறித்தபடி யானை நின்றது.
இதனால் டிரைவர் பயந்து லாரியை நிறுத்தினார். பின்னர் யானை லாரியில் இருந்த கரும்பு ஒவ்வொன்றையும் துதிக்கையால் இழுத்து சுவைக்க தொடங்கியது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கரும்புகளை யானை சுவைத்தது. அதைத்தொடர்ந்து கிளீனர் லாரியின் மேல் ஏறி கரும்புகளை எடுத்து சாலை ஓரத்தில் வீசினார். இதனால் யானை லாரியை விட்டு ரோட்டோரம் சென்று கரும்புகளை தின்றது. அதன்பின்னரே லாரி அங்கிருந்து சென்றது.
மற்ற வாகனங்களும் சென்றன. இதனால் காரப்பள்ளம்-புளிஞ்சூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, 'கரும்பு ஏற்றி செல்லும் லாரிகள் கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு வந்தால் லாரி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.