கரும்புகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்


கரும்புகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்
x

சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பப்பட்டு 3 மாதங்களாகியும் வழங்கப்படாமல் உள்ள பணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதனைபெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பணம் வழங்க வேண்டும்

வாணியம்பாடி பகுதியில் விவசாய நிலத்தில் தீவன பயிர்கள் மட்டுமே வளர்கிறது. விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் தழைச்சத்து பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெக்னாமலை ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்தும் அக்ராஹரம் ஏரி முழுகொள்ளவை எட்டவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி 3 மாதங்களை கடந்தும் அதற்கான பணம் வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும். திருப்பத்தூர் நகரை ஒட்டியுள்ள பகுதியில் ஒரே இடத்தில் 5 டாஸ்மாக் கடைகள் உள்ளது. குடித்துவிட்டு பாட்டில்களை விவசாய நிலத்தில் வீசி செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்யமுடியவில்லை. மேலும் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவு நடக்கிறது. அதனை தடுக்க வேண்டும்.

ஆம்பூர் பகுதி விவசாயத்திற்கு சிறந்த பகுதியாக இருந்தது. இன்று அங்கு எந்த விவசாயமும் செய்யமுடியவில்லை. அதனால் எந்த விதை போட்டால் பயிர் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினர்.

தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் குறித்த கையேட்டினை வெளியிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பதில் அளித்து பேசியதாவது:-

ஒருகோடி பனை விதைகள்

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகள் வியாபாரம் செய்பவர்கள் அல்ல. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் கரும்புக்கான தொகை விரைந்து வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு கோடி பனை விதைகள் நட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூர் பகுதியில் நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 நாட்களாக பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த காட்டுயானை விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் பாஸ்கரபாண்டியனுக்கு விவசாயிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story