நடப்பு ஆண்டில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 896 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 896 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 896 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் தொடர்புடைய 178 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வங்கி கணக்கு முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியபாகம், தென்பாகம், தெர்மல்நகர், சிப்காட், ஆத்தூர், குலசேகரப்பட்டினம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு, கயத்தாறு மற்றும் குளத்தூர் ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 560 கூலிப்ஸ் பாக்கெட்டுகள் உட்பட 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது

நடப்பு ஆண்டில் இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 862 வழக்குகள் பதிவு செய்து, 896 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 561 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதே போன்று கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்து, 124 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 86 கிலோ கஞ்சா மற்றும் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மதுபானம் விற்பனை

இதே போன்று மதுபானம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 2 ஆயிரத்து 282 வழக்குகள் பதிவு செய்து, 2 ஆயிரத்து 294 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 4 ஆயிரத்து 545 லிட்டர் மதுபானம், மற்றும் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 27 பேர் உள்பட 115 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்

கூலிப்ஸ் புகையிலை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட "கூலிப்ஸ்" புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story