திண்டுக்கல் மாவட்டத்தில் 15 மாதங்களில்1,110 கிலோ கஞ்சா பறிமுதல்-431 பேர் கைது


திண்டுக்கல் மாவட்டத்தில் 15 மாதங்களில்1,110 கிலோ கஞ்சா பறிமுதல்-431 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2023 2:15 AM IST (Updated: 29 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் 1,110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனின் நேரடி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் ரகசியமாக கண்காணித்து கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 371 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 970 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 178 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் 104 பேர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு இருக்கிறது. இதுதவிர 14 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கஞ்சா வியாபாரிகளுடைய ரூ.2 கோடியே 8¼ லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 3 மாதங்களில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்மூலம் அவர்களிடம் இருந்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் கஞ்சா வியாபாரிகளுடைய ரூ.8½ லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் 1,110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 431 பேர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story