அறுவடை வரை காத்திருக்க முடியாதா.? பயிர்களை அழித்ததற்கு சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
பயிர்களை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா என என்.எல்.சி.க்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொழிற்சங்கத்திற்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கு இடையிலான பிரச்சினை தொடர்பாக தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு முறையிடப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பணிக்கு அனைவரும் சென்றுகொண்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரனையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அப்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு, புல்டோசர்களை கொண்டு மண்களை அள்ளி கால்வாய் அமைப்பது தொடர்பான வீடியோக்கள் வந்திருக்கிறது. இது தொடர்பாக நீதிபதி, எல்.எல்.சி. நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பினார்.
அந்த வீடியோவை பார்க்கும் போது தனக்கு கண்னீர் வந்ததாகவும், பயிர்களை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா எனவும் என்.எல்.சி.க்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.
அதற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பே நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்கும்போது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிக தொகை கொடுக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், என்.எல்.சி. நிறுவனம் அளித்த பதிலை நீதிபதி ஏற்கவில்லை. ஒரு பயிர் என்பது சாதாரணமாக வளர்ந்துவிடவில்லை என்றும், பயிர் என்பது வாழ்வாதாரமாக இருக்கிறது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப்போகிறோம் என்றும், அந்த நேரத்தில் நிலக்கரி எந்த பயனையும் தரப்போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். தனது கருத்தால் என்.எல்.சி. நிறுவனம் கோபமடைந்தாலும் தனக்கு கவலையில்லை என்பதையும் நீதிபதி அழுத்தமாக தெரிவித்தார்.