பாகற்காய் சாகுபடி தொடங்கியது
கூடலூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தொடங்கியது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தொடங்கியது.
பாகற்காய் விவசாயம்
கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் பெய்வது வழக்கம். இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் விளையக்கூடிய இஞ்சி, ஏலக்காய், காபி மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டது. இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.
மேலும் மழைக்காலத்தில் பயிரிட்டு இருந்த நெல் அறுவடை பணியும் நிறைவு பெற்றது. தொடர்ந்து வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், அவரக்காய் உள்ளிட்ட கோடை கால பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதில் பாகற்காய் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளது. பாகற்காய் நடவு பணி தொடங்கி இருக்கிறது.
கேரளாவில் வரவேற்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இந்த மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும். இதேபோல் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டும், கோடை வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய் பயிருக்கு கேரளாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது.
இதனால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாகற்காய் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து பாகற்காய் அறுவடை செய்யப்பட்டு கேரளாவுக்கு தினமும் லாரிகளில் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகற்காய் உயர் ரக விதைகள் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.