நோய் தாக்குதலால் பாகற்காய் விளைச்சல் பாதிப்பு


நோய் தாக்குதலால் பாகற்காய் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் நோய் தாக்குதலால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் நோய் தாக்குதலால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நோய் தாக்குதல்

கூடலூர் பகுதியில் கோடைகால பயிரான பாகற்காய் விவசாயம் ஏக்கர் கணக்கில் மேற்கொள்ளப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விசு பண்டிகை, தமிழ் புத்தாண்டு ஆகியவைகளை கருத்தில் கொண்டு பாகற்காய்கள் விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பாகற்காய் கொடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளானது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூடலூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். இருப்பினும் பாகற்காய் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

விளைச்சல் குறைவு

இந்த நிலையில் விசு பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அறுவடை செய்யப்படும் பாகற்காய்களும் குறைவாகவே உள்ளது. இது மட்டுமின்றி செலவுக்கு ஏற்ப பாகற்காய் அறுவடை நடைபெறாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தேவை அதிகமாக இருந்தும் பாகற்காய் விளைச்சல் குறைவால் எதிர்பார்த்த வருவாயும் கிடைப்பதில்லை என்று அவர்கள் குமுறலுடன் கூறி வருகின்றனர்.

வருவாய் இழப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு செலவு அதிகரித்து வருகிறது. ஆனால் தொடர் நோய் தாக்குதலால் பாகற்காய் விளைச்சல் குறைந்துள்ளது. 2 டன் பாகற்காய் அறுவடை செய்த தோட்டங்களில் 700 கிலோ மட்டுமே கிடைக்கிறது.

கேரள மார்க்கெட்டில் பாகற்காய் கிலோ ரூ.63-க்கு விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கிலோ ரூ.40 மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே பயன் கிடைக்கும். வரும் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டால் பாகற்காய் விளைச்சல் இல்லாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story