போதை பொருள் தடுப்பு குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கொரடாச்சேரி:
திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றியம் நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியை தமிழ்நாடு காவல்துறை ஆணையத்தின் உறுப்பினரும், மூத்த மனநல மருத்துவர் ஆலோசகருமான ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளைச்சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு, மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை எடுத்துக்கூறி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக போதைப் பொருளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை மத்திய பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மவுன நாடகம் மூலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.