80 தெரு நாய்களை பிடித்து கருத்தடை


80 தெரு நாய்களை பிடித்து கருத்தடை
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 80 தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 80 தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டது.

தெருநாய்கள் தொல்லை

குழித்துறை நகராட்சி பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்களின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் நகராட்சி பகுதிகளில் நடந்து செல்பவர்களை விரட்டி செல்வதும், குரைப்பது என தொந்தரவு செய்து வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே குழித்துறை நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

கருத்தடை

அதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு அங்கீகரித்துள்ள மையத்தில் கொண்டு சென்று கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த 2 நாட்களாக குழித்துறை நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 80 தெருநாய்களை பிடித்து ஆரல்வாய்மொழி மையத்திற்கு கொண்டு சென்று கருத்தடை செய்யப்பட்டு நகராட்சி பகுதியில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி இன்னும் சில தினங்கள் நடைபெறும் என்று குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தெரிவித்தார்.


Next Story