கார்-2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், டீத்தூள் குடோன் தீப்பிடித்து எரிந்தது
கும்பகோணத்தில் கார்- 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், டீத்தூள் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கார்- 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், டீத்தூள் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
டீத்தூள் குடோன்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 46). இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீத்தூள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேல் தளத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சதீசுக்கு சொந்தமான கார் மற்றும் பேட்டரியில் இயங்கும் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது வீட்டு வாசல் அருகே உள்ள வளாக பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
தீப்பிடித்து எரிந்தது
வழக்கம்போல் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டின் வாசல் அருகே உள்ள வளாக பகுதியில் நிறுத்திவிட்டு ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் சதீஷ் வீட்டு வாசல் அருகே வளாக பகுதியில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியானது.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சதீசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் மற்றும் அவரது தாயார் அன்னபூரணி, மகன் தனுஷ், உறவினர் கணேசன் ஆகியோர் எழுந்து கீழே இறங்கி வருவதற்குள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார் தீப்பிடித்து எரிந்தது அந்த கட்டிடம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
புகை மூட்டத்தால் மூச்சு திணறல்
இதனால் மாடியில் இருந்தவர்கள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். மேலும் அதிகமாக வெளியேறிய புகை மூட்டத்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கும்பகோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன் மாடியில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தவர்களை மீட்டு கீழே கொண்டுவந்து அவர்களை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
இந்த தீவிபத்தில் கீழே குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீ தூள் பாக்கெட்டுகள் மற்றும் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், கார் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்ததீ விபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போட்ட போது மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்த நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இடத்தை அன்பழகன் எம்.எல்.ஏ., துணை மேயர் தமிழழகன் உள்பட பலர் பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.