பொங்கல் படி கொண்டு சென்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து - 2 பெண்கள் பலி
குமரி அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
குமரி,
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் பாலசுந்தரம். இவரின் மகள் உமாவுக்கு தலை பொங்கல் என்பதால் பொங்கல் சீர்வரிசை கொடுக்க முடிவு செய்தனர்.
இதனால் காக்கமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிக்கு காரில் (சுமோ) பொங்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். காரில் தந்தை பாலசுந்தரம் மனைவி சுபா (வயது 55) உறவினர்கள் பிரேமா(வயது 45), சுப்பு என்ற சுப்புலெட்சுமி (55), உமா(50), பாட்டி உலகம்மாள் (75) சிறுமி சிபிக்ஷா ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த காரை ஜெகன் என்ற ஜெகநாதன் (வயது 28) ஓட்டினார். நாஞ்சில் புத்தனாறுகால்வாய் சாலைவழியே தாழக்குடி நோக்கி கார் சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதில் கார் பலமுறை உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உமா, உலகம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்த 2 பேரின் உடலைகளை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலை பொங்கலுக்கு பொங்கல் படி கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.