கார் தீ வைத்து எரிப்பு; 2 பேர் கைது
மசினகுடிக்கு சுற்றுலா வந்த போது, மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நண்பரின் காரை தீ வைத்து எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
மசினகுடிக்கு சுற்றுலா வந்த போது, மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நண்பரின் காரை தீ வைத்து எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அலி (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 1 மாதத்துக்கு முன்பு விடுமுறையில் கேரளாவுக்கு வந்தார். இந்தநிலையில் முகமது அலி நண்பர்களான அம்சா (52), அப்துல் ரஷீத் (39) ஆகியோருடன் தனது காரில் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் இரவு மசினகுடியில் காரில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது 3 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முகமது அலியை அம்சா, அப்துல் ரஷீத் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காரில் இருந்து இறங்கிய முகமது அலி, மசினகுடி வனத்துறை சோதனைச்சாவடி பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தார். இந்தநிலையில் நேற்று தனது காரை நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு முகமது அலி சென்று பார்த்தார்.
2 பேர் கைது
அப்போது கார் தீயில் எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது நண்பர்களையும் காணவில்லை. இதுகுறித்து முகமது அலி மசினகுடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அம்சா, அப்துல் ரஷீத்தை தேடும் பணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமேஷ்வரன், இப்ராகிம், லட்சுமணன் மற்றும் போலீசார் கூடலூர் சாலைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பின்னர் முதுமலை வழியாக கூடலூருக்கு வந்த அப்துல் ரஷீத், அம்சா ஆகியோரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், காரை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.