கார்-ஆட்டோ மோதல்; வியாபாரி படுகாயம்
கிணத்துக்கடவு அருகே கார்-ஆட்டோ மோதியதில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). வியாபாரி. சம்பவத்தன்று இவர் சரக்கு ஆட்டோவில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தார். 4 வழிச்சாலையில் சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த கார் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் சரவணகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல நல்லட்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (52) என்பவர் தனது மொபட்டில் தாமரைகுளம்-நல்லட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆனந்தராஜ் மொபட் மீது மோதியது. இதில் ஆனந்தராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.