கார் வெடிப்பு சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. பிரமுகர்கள் உள்பட 6 பேர் வீடுகளில் போலீசார் சோதனை


கார் வெடிப்பு சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. பிரமுகர்கள் உள்பட 6 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
x

கார் வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. பிரமுகர்கள் உள்பட வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை,

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் வசித்து வருபவர் ராஜா உசேன். இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா உசேன் வீட்டிலும், உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் முகமது உசேன் என்பவரின் வீட்டிலும், சாய்பாபா காலனியில் உள்ள மற்றொரு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ரோஷன் என்பவர் வீட்டிலும், உக்கடம் அன்புநகரில் உள்ள த.மு.மு.க. நிர்வாகி சாதிக்அலி என்பவர் வீட்டிலும் மொத்தம் 4 பேர் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதுதவிர கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் வசித்து வந்த உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.

திருச்சியில்...

இதேபோல திருச்சி விமானநிலையம் வயர்லெஸ்ரோடு ஸ்டார்நகரில் வசித்து வரும் அப்துல்முத்தலிப் (வயது 35) என்பவர் வீட்டில் போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு பிறகு, அவரது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகரில் வசித்து வரும் ஜூபேர்அகமது (30) என்பவர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சோதனை நடத்த வேண்டியவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த போலீஸ் நிலையம் வாரியாக தயார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று (நேற்று) எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், த.மு.மு.க. நிர்வாகி உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தயாரித்து அளித்த பட்டியல்படி இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story