கட்டையால் தாக்கியதில் புரோக்கர் சிகிச்சை பலனின்றி சாவு
கட்டையால் தாக்கியதில் புரோக்கர் சிகிச்சை பலனின்றி சாவு
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் கார் விற்ற பணத்தில் கமிஷன் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறின் போது கட்டையால் தாக்கியதில் புரோக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்காக மாற்றி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் புரோக்கர் சாவு
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் திருப்பூரில் தங்கி கார்களை விற்று கொடுக்கும் புரோக்கர் தொழில் செய்து வந்தார். இவருடன் சேர்ந்து சென்னையை சேர்ந்த ஹோப்ஸ், காமாட்சி, பிரபு, கண்ணன் ஆகியோரும் புரோக்கர் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி இரவு திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகர் பகுதியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் முருகன், சென்னை ஹோப்ஸ், காமாட்சி, பிரபு, கண்ணன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு காரை விற்றுக் கொடுத்ததில் கமிஷன் பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சென்னை ஹோப்ஸ், காமாட்சி, பிரபு, கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து முருகனை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் அவருடைய சொந்த ஊரான சின்னமனூருக்கு சென்று விட்டார். பின்னர் முருகன் கடந்த 28-ந்தேதி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்காக மாற்றம்
இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சம்பவத்தில் தொடர்புடைய சென்னை ஹோப்ஸ், பிரபு, கண்ணன் உள்ளிட்ட 3 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காமாட்சியை போலீசார் தேடி வருகின்றனர்.