கடலூர் அருகே தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடான கார்
கடலூர் அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது. இதில் பயணித்த சென்னையை சேர்ந்த அனல்மின் நிலைய ஊழியர் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர்,
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 55). இவர், கல்பாக்கத்தில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ஷியாமளா, மகள் சாவித்திரி, மகன் ராகுல் கிருஷ்ணன் ஆகியோருடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று காலை காரில் புறப்பட்டார். காரை ரமேஷ் என்பவர் ஓட்டினார். மதியம் 2 மணி அளவில் டீ குடிப்பதற்காக கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு கார் நிறுத்தப்பட்டது. 5 பேரும் காரில் இருந்து இறங்கி ஓட்டலுக்குள் சென்றனர்.
தீப்பிடித்து எரிந்த கார்
அப்போது காரின் முன்பகுதியில் உள்ள என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் குடும்பத்தினர், ஓட்டலில் இருந்தவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.
காரணம் என்ன?
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று காரை பார்வையிட்டனர். என்ஜினில் ஏற்பட்ட அதிக வெப்பத்தின் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீ குடிப்பதற்காக சாலையோரத்தில் காரை நிறுத்திச் சென்றபோது தீப்பிடித்து எரிந்ததால் விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.