கார்-சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி


கார்-சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
x

கீரமங்கலத்தில் கார்-சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். வெள்ளி வியாபாரிகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

கார்-சரக்கு வேன் மோதல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மகன் அரவிந்த் (வயது 30). இவர் சரக்கு வேனில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு வேனில் திடீரென ஸ்டியரிங் இணைப்பு துண்டிக்கப்பட்டு முன்பக்க சக்கரங்கள் தாறுமாறாக ஓடி வேகமாக திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் பைசல் (43), அவரது மகன் பர்ஹான் (14), மணி (43) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் கார் டிரைவர் பூவரசக்குடி குணசேகரன் மகன் வெங்கடேசன் (24) மற்றும் சரக்கு வேன் டிரைவர் அரவிந்த் ஆகியோர் படுகாயமடைந்து வாகனங்களில் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் காரில் இருந்தவர்கள் 3 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் பலி

தொடர்ந்து கார் மற்றும் சரக்கு வேனில் இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த டிரைவர்கள் இருவரையும் அப்பகுதி இளைஞர்களும், அங்கு வந்த கீரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்களும் மீட்டு மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கார் டிரைவர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story